Sunday Aug 25, 2024

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம் – 6414040

இறைவன்

இறைவன்: பட்டீஸ்வரர் இறைவி: பச்சை நாயகி

அறிமுகம்

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். அப்பர், சுந்தரர் ஆகியோரின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீஸ்வரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான “பட்டி’ விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது. பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் “உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் “காமதேனுபுரம்’ என்றும், உன் கன்றின் பெயரால் “பட்டிபுரி’ என்றும், எனக்கு “பட்டீஸ்வரர்’ என்றும் பெயர் வழங்கப்படும்,”என அருளினார்.

நம்பிக்கைகள்

முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும், நினைத்த காரியம் நடைபெறவும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேம் செய்தும், வில்வ இலையால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சிவலிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார். முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர். இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் “இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம். இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் “நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள். • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். • மணிவாசகரின் திருக்கோவையாரிலும் இத்தலம் போற்றப்படுகிறது. • அருணகிரிநாதர் இங்குள்ள முருகனைப் போற்றித் திருப்புகழ் அருளியுள்ளார். • நொய்யலாற்றின் கரையில் உள்ள தலம். • இத்தலத்திற்குக் காஞ்சிவாய்ப்பேர், மேலச்சிதம்பரம், இனாம்பேரூர், அரசம்பலம் என பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது. • தலவரலாறு தொடர்புடையதால் – இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது. • சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. • அம்பாள் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதியும் இருக்கிறது. • சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார். • சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம். • இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது – மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. • முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞானபைரவர் இங்கு அருள் செய்கிறார். • இத்தலத்தில் நாற்று நடும் திருவிழா விசேஷம். • இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பதும் அழியாப்புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். • ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். • நொய்யல் நதியில் இறந்தவர்களின் எலும்புகளையிட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறிவிடும் என்பது ஐதீகம். • இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் “நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர். • பேரூர்த் தலத்திற்குறிய சிறப்புக்களாக எழும்பு கல்லாதல், இறவாப்பனை, பிறவாப்புளி – இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை, திருநீற்றுமேடு, செம்பு பொன்னாதல், இறக்கும் உயிர்கள் வலச் செவியை மேல்வைத்து இறத்தல், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது போன்றச் சிறப்புச் செய்திகள் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. • இங்குள்ள நடராசர் அம்பலம் – நடராச சபை, வேறெங்கும் காண முடியாத சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. இம்மண்டபம் முழுவதுமே – ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது. இச்சபை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு வரலாறு கூறுகிறது. • கோயிலுக்கு எதிரே 16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம் மற்றும் இறவாப்பனையும், பிறவாப்புளியும் உள்ளது. • சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இத்தலம் “மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது. • பேரூர் புராணத்தை திருவாவடுதுறை ஆதீனம் கவிராக்ஷ கச்சியப்பமுனிவர் எழுதியுள்ளார். • கரிகாற்சோழன் இத்தலத் திருக்கோயிலைக் கட்டினான் என்று சோழர்களின் பூர்வபட்டயம் கூறுகிறது. • இத்தலம் “பேரூர் நாட்டுக் கோவன்புத்தூர்” என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top