Tuesday Jul 23, 2024

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன்: +91- 4142 262646, 264 638, 93456 56982

இறைவன்

இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வித்யூஜோதிநாயகி

அறிமுகம்

திருக்கடம்பூர் – மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும். ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன.

புராண முக்கியத்துவம்

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி “அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள்செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே, இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி, கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம், தான் தேரை எடுத்துச்செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம், கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர், ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி, ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி, இந்திரன் “ருத்ரகோடீஸ்வர’ லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, “”தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி, அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம்,” என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம். தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது. பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

நம்பிக்கைகள்

செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, “வித்யஜோதிநாயகி’ (வித்யா – சரஸ்வதி, ஜோதி – லட்சுமி, நாயகி – துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு “ஜோதிமின்னம்மை’ என்றும் பெயர் உண்டு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு, வளையல் படைத்து வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர், “”என் கடன் பணிசெய்து கிடப்பதே,” என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார். ரிஷபதாண்டவர் இத்தலத்தில் “ரிஷபதாண்டவமூர்த்தி’ நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஆரவார விநாயகர்: இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, “ஆரவார விநாயகர்’ என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார். செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக்கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னர்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னர்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top