Wednesday Jul 24, 2024

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி

அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி – 641 652 திருப்பூர் மாவட்டம். போன் +91- 4296- 273 507

இறைவன்

இறைவன்: திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர் இறைவி: ஆவுடை நாயகி, மங்களாம்பிகை,

அறிமுகம்

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தலம், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. அவினாசி-திருப்பூர் சாலையில் அவினாசியிலிருந்து சுமார் 6.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்துக்கு அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் திருப்பூர் தொடருந்து நிலையம்; வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம். இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

ஆயிரத்தெட்டுஅண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தி வந்தான்.அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட முருகன் சம்ஹாரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.எப்படியிருப்பினும், சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார்.அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீர் எடுத்து சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய்(சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்முகதீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார்.தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார்.இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும் படி முறையிட்டார். தனது தகப்பனின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருள் மீட்டுத் தரும்படி வேண்டினார்.அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது. தலசிறப்பு இத்தலத்தின் முதன்மையானவரான சிவன்,முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது.முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு தனது வேலை கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல், தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டு பாடியபோதும், பின்னர் பொருளைத் திரும்பப்பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, அந்தணர்களுக்கு தானமும் செய்தான். அதன் பயனாக அவன் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், நீலகண்டி என்ற திருநாமத்துடன், காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.

திருவிழாக்கள்

மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமுருகன்பூண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top