செருவாமணி வன்மீகநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
செருவாமணி வன்மீகநாதர் சிவன்கோயில்,
செருவாமணி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610205.
இறைவன்:
வன்மீகநாதர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள பாங்கல் நான்கு ரோட்டில் இருந்து திருநெல்லிக்கா – திருத்தெங்கூர் – கீராளத்தூர் சென்று செருவாமணி அடையலாம். மொத்தம் பத்து கிமீ தூரம் செல்லவேண்டியதாக இருக்கும். வெண்ணாற்றின் மேற்கு கரையில் இருக்கும் இந்த ஊரின் மத்தியில் பெரிய இரண்டு குளங்களின் நடுவில் செல்லும் சாலையின் ஓரத்தில் பெரிய மதில் சுவற்றுடன் கூடிய வளாகத்தில் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில்.
இறைவன்- வன்மீகநாதர் இறைவி – மங்களாம்பிகை வன்மீகம் என்றால் கரையான்; கரையான் புற்றில் இருந்து எழுந்தருளி அருள் பாலிக்கும் இறைவன் என்பதால் இப்பெயர். அனைத்து மங்கலங்களையும் அளிக்கும் தேவி என்பதால் மங்கலாம்பிகை; தற்போது சொல் திரிபு ஆகி மங்களாம்பிகை எனப்படுகிறார். இக்கோயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை இருப்பதால் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை என கூறலாம். கிழக்கில் ஒரு அலங்கார வாயிலும், தெற்கில் அம்பிகையின் எதிரில் ஒரு அலங்கார வாயிலும் உளளன.
கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை தரை மட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது. பிரஸ்தரம் எனும் மேற்கூரை மட்டம் வரை செதுக்கப்பட்ட கருங்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் முன்னர் ஒரு நீண்ட கருங்கல் மண்டபம் உள்ளது தெற்கு நோக்கிய அம்பிகையின் கருவறை இதில் இணைகிறது. இந்த மண்டபத்தின் வெளியில் இறைவனை நோக்கியபடி ஒரு நந்தி மண்டபம் உள்ளது. கருவறை பெரிதாக வேலைப்பாடுகள் கொண்டதாக இல்லை. கருவறை கோட்டத்தில் தென்முகனுக்கு சிறிது முன்னிழுக்கப்பட்ட ஒரு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில் துர்க்கைக்கு சுவரை ஒட்டி ஒரு தனி மாடம் உள்ளது. தென்மேற்கில் விநாயகர் வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக உள்ளார். சண்டேசர் வழமையான இடத்தில் தனி சிற்றாலயத்தில் உள்ளார்.
கோயிலின் வடகிழக்கு பகுதி மட்டும் சற்று வடக்கு நோக்கி நீண்டு உள்ளது அதில் ஒரு மண்டபத்தில் நவகிரகங்களும், மற்றுமொரு மண்டபத்தில் மேற்கு நோக்கிய இரட்டை பைரவர்களும், அருகில் சூரியன் மற்றும் இரு நாகர்களும் உள்ளனர். நிலை நிறுத்தப்படாமல் தனியாக ஜேஷ்டா, சண்டேசர் பெருமாள் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆயிரம் ஆண்டு கோயில் பல மாற்றங்களின் பின்னர் இன்றுள்ள நிலையில் உள்ளது. இதே ஊரில் ஒரு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது இதன் அக்ரஹார தெருவில் இக்கோயில் சிவாச்சாரியார் உள்ளார், அக்ரஹார தெரு வீடுகளின் நிலையே அங்குள்ள சிவாச்சாரியார், பட்டர்களின் நிலையை எடுத்து கூறுவதாக அமைந்துள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செருவாமணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி